குட்கா முறைகேடு- தமிழகம் முழுவதும் 40 இடங்களில் சிபிஐ அதிகாரிகள் சோதனை

குட்கா முறைகேடு- தமிழகம் முழுவதும் 40 இடங்களில் சிபிஐ அதிகாரிகள் சோதனை
தமிழ்நாட்டில் குட்கா விற்பனை செய்வதற்கு கடந்த 2013-ம் ஆண்டு அரசு தடை விதித்தது.
இந்த தடையை மீறி சென்னை உள்பட முக்கிய நகரங்களில் குட்கா விற்பனை செய்யப்படுகிறது. போலீசாருக்கு லஞ்சம் கொடுத்து விட்டு சிறிய கடைகளில் குட்கா விற்பனை படுஜோராக நடக்கிறது.

இந்த நிலையில் தமிழகத்தில் நடக்கும் குட்கா விற்பனையில் பல கோடி ரூபாய் வரி ஏய்ப்பு நடப்பதாக மத்திய வருமான வரித்துறைக்கு ரகசிய தகவல்கள் சென்றன. அதன்பேரில் சென்னை செங்குன்றத்தில் செயல்பட்டு வந்த எம்.டி.எம். குட்கா ஆலையில் கடந்த 2016-ம் ஆண்டு ஜூலை மாதம் வருமான வரித்துறை அதிகாரிகள் அதிரடி சோதனை நடத்தினார்கள்.

அந்த ஆலையில் தடை செய்யப்பட்ட குட்கா மற்றும் போதை பொருட்கள் தயாரிக்கப்படுவது கண்டு பிடிக்கப்பட்டது. இங்கிருந்து தமிழ்நாடு முழுவதும் கடைகளுக்கு சப்ளை செய்யப்பட்டு விற்பனை ஆவதும் வெளிச்சத்துக்கு வந்தது.

குட்கா ஆலை பங்குதாரர் மாதவராவ் வீட்டிலும், குடோனிலும் சோதனை நடத்தப்பட்டது. அப்போது மாதவராவ் உதவியாளர் வீட்டில் இருந்து ரகசிய டைரி ஒன்று சிக்கியது.

அந்த டைரியில் குட்கா தயாரிப்பு மற்றும் விற்பனையை கண்டு கொள்ளாமல் இருப்பதற்காக மாநகராட்சி உயர் அதிகாரிகள், உணவு பாதுகாப்பு அதிகாரிகள், போலீஸ் உயர் அதிகாரிகளுக்கு லஞ்சம் கொடுத்த விவரம் இடம் பெற்று இருந்தது.

ஒவ்வொரு போலீஸ் அதிகாரிக்கும் எந்தெந்த தேதிகளில் எத்தனை லட்சம் ரூபாய் லஞ்சமாக கொடுக்கப்பட்டது என்ற விவரமும் துல்லியமாக எழுதப்பட்டு இருந்தது.

அதிகாரிகள் துணையோடு குட்கா விற்ற வகையில் எவ்வளவு வரி கட்டப்பட்டு இருக்கிறது என்ற குறிப்புகளும் இருந்தன. இந்த டைரி தகவல்தான் அதிகாரிகள் சிக்குவதற்கு ஆதாரமாக அமைந்தது.

தமிழக சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் பெயரும் அந்த டைரியில் இடம் பெற்று இருப்பதாக வருமான வரித்துறை தெரிவித்து இருந்தது. இதைத் தொடர்ந்து அப்போதைய சென்னை மாநகர போலீஸ் கமி‌ஷனர் உள்பட 23 அதிகாரிகளுக்கு ரூ.60 லட்சம் வீதம் மொத்தம் ரூ.40 கோடி லஞ்சம் வழங்கியதாக தகவல்கள் வெளியானது. டி.ஜி.பி. டி.கே.ராஜேந்திரன் மீதும் குற்றம் சாட்டப்பட்டது.

இது தொடர்பாக குட்கா பங்குதாரர் மாதவராவிடம் தீவிர விசாரணை நடத்தப்பட்டது. அப்போது அவர் மாதாமாதம் தவிர தீபாவளி, கிறிஸ்துமஸ் போன்ற பண்டிகை காலங்களிலும் லஞ்சம் கொடுத்து இருப்பதாக வருமான வரித்துறையிடம் தெரிவித்ததாக கூறப்படுகிறது.

இந்த ஆதாரத்தின் அடிப்படையில் அமைச்சர் விஜயபாஸ்கர் மற்றும் அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்கும்படி தமிழக அரசின் தலைமைச் செயலாளர், போலீஸ் டி.ஜி.பி. ஆகியோருக்கு வருமான வரித்துறை முதன்மை ஆணையர் கடிதம் எழுதி இருந்தார்.

இதையடுத்து தமிழக லஞ்ச ஒழிப்பு போலீசார் பெயரளவுக்கு விசாரணை நடத்தி சில போலீஸ் அதிகாரிகள் மீது வழக்குப்பதிவு செய்தனர். தொடர்ந்து மேல் நடவடிக்கை எடுக்கப்படவில்லை.

இதனால் சி.பி.ஐ. விசாரணை கோரி சென்னை ஐகோர்ட்டில் தி.மு.க. சார்பில் வழக்கு தொடரப்பட்டது. அதை ஏற்று குட்கா ஊழல் பற்றி சி.பி.ஐ. விசாரணை நடத்த சென்னை ஐகோர்ட்டு உத்தரவிட்டது. டெல்லி சி.பி.ஐ. அதிகாரிகள் விசாரிக்க உத்தரவிடப்பட்டு இருந்தது.

அதன்பேரில் சி.பி.ஐ. சார்பில் பெயர் குறிப்பிடாமல் கலால் துறை, உணவு பாதுகாப்புத் துறை, போலீஸ் அதிகாரிகள் உள்ளிட்டோர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டது. மேலும் சட்ட விரோத பணபரிவர்த்தனை நடந்து இருப்பதால் இது தொடர்பாக அமலாக்கப் பிரிவும் வழக்குப்பதிவு செய்தது. இதிலும் யாருடைய பெயரும் குறிப்பிடப்படவில்லை.

சமீபத்தில் டெல்லியில் இருந்து வந்த சி.பி.ஐ. அதிகாரிகள் குட்கா பங்குதாரர் மாதவராவிடம் விசாரணை நடத்தினார்கள். சுமார் 10 மணி நேரம் நீடித்த இந்த விசாரணையில் குட்கா ஊழல் தொடர்பாக ஏராளமான தகவல்கள் சி.பி.ஐ. அதிகாரிகளுக்கு கிடைத்தது. எனவே சி.பி.ஐ.யின் அடுத்த அதிரடி எந்த நேரத்திலும் இருக்கலாம் என்ற எதிர்பார்ப்பு ஏற்பட்டது.

இந்த நிலையில் குட்கா ஊழல் தொடர்பாக சி.பி.ஐ. அதிகாரிகள் இன்று (புதன்கிழமை) அதிரடி சோதனையில் ஈடுபட்டனர். இந்த ஊழலில் குற்றம் சாட்டப்பட்டுள்ள அமைச்சர் விஜயபாஸ்கரின் கிரீன்வேஸ் சாலையில் உள்ள வீட்டுக்கு காலை 8 மணிக்கு 5 அதிகாரிகள் சென்றனர். வீட்டை பூட்டிக்கொண்டு சோதனையில் ஈடுபட்டனர்.

அதே நேரத்தில் முகப்பேர் மேற்கில் உள்ள போலீஸ் டி.ஜி.பி. டி.கே.ராஜேந்திரன் வீட்டிலும் சி.பி.ஐ. அதிகாரிகள் அதிரடியாக புகுந்து சோதனையில் ஈடுபட்டனர்.

நொளம்பூர் புதிய போலீஸ் நிலையம் அருகில் உள்ள அவரது வீட்டில் 10 அதிகாரிகள் சோதனை மேற்கொண்டனர். குட்கா ஊழலில் பரபரப்பாக பேசப்பட்ட முன்னாள் போலீஸ் கமி‌ஷனரான ஜார்ஜின் வீட்டிலும் சோதனை நடந்தது.

நொளம்பூர் பாரிசாலையில் உள்ள அவரது வீட்டிலும் சி.பி.ஐ. அதிகாரிகள் குழு அதிரடி சோதனையில் ஈடுபட்டனர். இங்கு 5 அதிகாரிகள் சோதனை நடத்தினர்.

போலீஸ் அதிகாரிகளான டி.கே.ராஜேந்திரன், ஜார்ஜ் இருவரது வீடுகளும் ஒரே பகுதியில் அமைந்துள்ளன. இதனால் இன்று நடைபெற்ற இந்த சோதனை அப்பகுதியில் பரபரப்பாக பேசப்பட்டது.

சென்னை போலீஸ் வட்டாரத்தில் மட்டுமின்றி, தமிழகம் முழுவதும் உள்ள போலீஸ் அதிகாரிகள் மட்டத்திலும் சி.பி.ஐ. நடத்திய இந்த அதிரடி வேட்டை உச்சக்கட்ட பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

டி.ஜி.பி.யாக பொறுப்பில் இருக்கும் ஒருவர் மீது ஊழல் குற்றச்சாட்டு கூறப்பட்டு இருப்பதும், அது தொடர்பாக, சி.பி.ஐ. அதிகாரிகள் சோதனை நடத்தி இருப்பதும், தமிழக காவல்துறை வரலாற்றில் இதுவே முதல் முறையாகும்.

இவர்கள் தவிர முக்கிய உயர் போலீஸ் அதிகாரிகளின் வீடுகளிலும் சி.பி.ஐ. சோதனை நடந்து வருகிறது.

அமைச்சரின் உதவியாளர், முன்னாள் அமைச்சர் பி.வி.ரமணா மற்றும் சில பினாமிகளின் வீடுகளிலும் சோதனை நடத்தப்பட்டு வருகிறது. விழுப்புரம் உள்பட தமிழ்நாடு முழுவதும் மொத்தம் 40 இடங்களில் சோதனை நடைபெற்று வருகிறது. சி.பி.ஐ.யின் இந்த நடவடிக்கை பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

குட்கா விற்பதற்கு லஞ்சம் பெற்ற போலீஸ் உயர் அதிகாரிகள் யார்- யார்? அவர்களுக்கு எவ்வளவு பணம் லஞ்சமாக கொடுக்கப்பட்டது? என்பது போன்ற தகவல்களை ஏற்கனவே டெல்லி சி.பி.ஐ. அதிகாரிகள் திரட்டி விட்டனர். இந்த ஊழ லில் ஏராளமான அரசு ஊழியர்கள் மிகப்பெரிய நெட்வொர்க் அமைத்து செயல்பட்டதையும் சி.பி.ஐ. கண்டுபிடித்துள்ளது.

ஆனால் இந்த ஊழலில் மொத்தம் 23 அதிகாரிகளுக்கு மட்டுமே தொடர்பு இருப்பதாக வருமான வரித்துறை தகவலில் குறிப்பிடப்பட்டு இருந்தது. அதுபோல லஞ்ச ஒழிப்புத்துறையினரும் சில அதிகாரிகள் பெயரை மட்டுமே குறிப்பிட்டு இருந்தனர்.

இந்த நிலையில் டெல்லி சி.பி.ஐ. அதிகாரிகள் அதிரடி விசாரணை நடத்தி குட்கா ஊழலில் தொடர்புடைய மேலும் சில அதிகாரிகளை கண்டுபிடித்துள்ளனர். அதன் அடிப்படையில் தற்போது அடுத்த கட்ட நடவடிக்கையில் சி.பி.ஐ. இறங்கி உள்ளது.

குற்றம் சாட்டப்பட்டுள்ள 2 உயர் போலீஸ் அதிகாரிகள், கலால் துறை அதிகாரிகள், உணவு பாதுகாப்புத் துறை அதிகாரிகளுக்கு சம்மன் அனுப்பி நேரில் வரவழைத்து விசாரணை நடத்தவும் முடிவு செய்துள்ளனர்.

குட்கா ஊழல் விசாரணையில் சி.பி.ஐ. பிடி இறுகுவதால் இதில் தொடர்புடைய அரசியல்வாதிகள், உயர் அதிகாரிகள் கலக்கம்
https://goo.gl/k52aeP


17 Mar 2019

2019 மக்களவைத் தேர்தல்: மத்திய சென்னையில் தயாநிதி மாறன்; தூத்துக்குடியில் கனிமொழி போட்டி- திமுக வேட்பாளர் பட்டியல் அறிவிப்பு

06 Mar 2019

தேமுதிகவுக்கு கைவிரித்த திமுக: இடமில்லை என துரைமுருகன் பேட்டி

06 Mar 2019

சென்னை சென்ட்ரல் ரயில்நிலையத்துக்கு எம்ஜிஆர் பெயர்: பிரதமர் மோடி அறிவிப்பு

19 Feb 2019

குடும்ப பிரச்சினை காரணமாக இரு மகன்களை கொன்று தாய் தற்கொலை

19 Feb 2019

அ.தி.மு.க.வுடன் கூட்டணி உடன்பாடுபா.ம.க.வுக்கு 7; பா.ஜனதாவுக்கு 5 தொகுதிகள்தே.மு.தி.க.வுடன் இழுபறி

06 Feb 2019

குப்பைமேட்டில் கிடைத்த பெண்ணின் கை, கால்கள் அடையாளம் தெரிந்தது: திரைப்பட இயக்குநரான கணவர் கைது

03 Jan 2019

கருணாநிதியின் அழகு தமிழுக்கு மயங்காதவர் யாரும் இல்லை; சட்டப்பேரவையில் இரங்கல் தீர்மானம் வாசிப்பு

02 Jan 2019

கூலிப்படை உதவியுடன் மகனை கொன்ற கள்ளக்காதலனை தீர்த்து கட்டிய பெண்

30 Dec 2018

சென்னையில் 15 ஆண்டுகளுக்குப்பின் மழையளவு 55 சதவீதம் குறைவு: கடும் குடிநீர் தட்டுப்பாடு அபாயம்

30 Dec 2018

அரசு நிர்வாகம் முற்றிலும் நிலை குலைந்துள்ளதற்கு எச்.ஐ.வி. ரத்த விவகாரமே சாட்சி - ஸ்டாலின்