நாகபுரியில் நடைபெற்ற முதல் டுவென்டி20 ஆட்டத்தில் இலங்கை 29 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி கண்டது.
இதையடுத்து இந்த 2-வது ஆட்டத்தில் இந்தியா வெற்றி பெற்றே ஆகவேண்டிய கட்டாயத்தில் உள்ளது. இலங்கைக்கு 2-வது ஆட்டத்தில் இந்தியா பதிலடி கொடுத்து தொடரை சமன் செய்யவேண்டும் என்று ரசிகர்கள் எதிர்பார்க்கின்றனர்.
முதல் ஆட்டத்தை பயிற்சி ஆட்டமாக கருதி விளையாடியதால் தோல்வி கண்டோம் என்று இந்திய அணியின் கேப்டன் எம்எஸ் தோனி கூறியுள்ளார்.
எனவே 2-வது ஆட்டத்தில் இந்திய அணி சிறப்பாக விளையாடி தொடரை சமன் செய்யும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
காயம் காரணமாக ஸ்ரீசாந்த், ரோஹித் சர்மா ஆகியோர் அணியில் இடம்பெற மாட்டார்கள். இதைத் தொடர்ந்து ரவீந்திர ஜடேஜா அணிக்கு அழைக்கப்பட்டுள்ளார்.
ஃபீல்டிங்கிலும், பெüலிங்கிலும் இந்திய அணி கோட்டை விட்டதால் முதல் ஆட்டத்தில் தோல்வி கண்டது. 2-வது ஆட்டத்தில் அதை சரி செய்துகொண்டு சிறப்பாக விளையாடுவோம் என்று தோனி கூறியுள்ளார்.
கம்பீர், சேவாக், தோனி, யுவராஜ் சிங், சுரேஷ் ரெய்னா, யூசுப் பதான் ஆகியோர் தங்களது பங்களிப்பை சிறப்பாக அளிக்கும் பட்சத்தில் இந்திய அணிக்கு வெற்றி கிட்டும்.
இதேபோல நெஹ்ரா, இஷாந்த் சர்மா, தியாகி, ஓஜா ஆகியோர் திறமையாக பந்துவீசினால் இந்திய அணி தொடரை சமன் செய்துவிடும்.
அதே நேரத்தில் முதல் ஆட்டத்தில் வெற்றி பெற்ற உற்சாகத்தில் இலங்கை களமிறங்குகிறது.
ஜயசூர்யா, தில்ஷன், சங்ககரா, மஹேல ஜயவர்த்தனா, கபுகடேரா, மேத்யூஸ் என அந்த அணியின் பேட்டிங் பட்டியல் நீளுகிறது. முதல் ஆட்டத்தில் 37 பந்துகளில் 78 ரன்கள் குவித்த சங்ககரா இந்த ஆட்டத்திலும் கலக்குவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
2-வது டுவென்டி20 ஆட்டத்தில் இந்திய வீரர் ரோஹித் சர்மா காயம் காரணமாக விலகியுள்ளார்.
ரோஹித் சர்மா, தோள்பட்டையில் ஏற்பட்ட காயம் காரணமாக மொஹாலி போட்டியில் விளையாட மாட்டார் என அறிவிக்கப்பட்டுள்ளது.
அதேபோல நாகபுரியில் நடைபெற்ற முதல் ஆட்டத்தில் ஸ்ரீசாந்த், வைரஸ் தொற்று காரணமாக அவதிப்பட்டார். இதனால் அவர் முதல் போட்டியில் பங்கேற்கவில்லை. அவர் உடல்நிலை சரியாகாததால் 2-வது ஆட்டத்திலும் அவர் பங்கேற்க முடியாத நிலை உள்ளது.