தமிழகத்தில் உலக அளவிலான கேரம் சாம்பியன் போட்டிகள் 2011-ல் நடைபெறும் என கேரம் சங்க மாநில தலைவரும் தமிழ்நாடு எரிசக்தி துறையின் முதன்மைச் செயலருமான கிறிஸ்துதாஸ்காந்தி கூறினார்.
தருமபுரி நல்லானூர் ஜெயம் பொறியியல் கல்லூரியில் 51-வது மாநில அளவிலான கேரம் போட்டிகள் வெள்ளிக்கிழமை துவங்கி 3 நாள்கள் நடைபெறுகின்றன. இதை தொடங்கி வைத்து அவர் பேசியது:
தமிழகத்தில் 16 மாவட்டங்களிலிருந்துதான் மாநில மற்றும் தேசிய அளவிலான கேரம் போட்டிகளில் பங்கேற்கின்றனர். 32 மாவட்டங்களிலும் கேரம் விளையாட்டு வீரர்களை உருவாக்க வேண்டும்.
சென்னையில் மட்டுமே நடைபெற்றுவந்த மாநில கேரம் போட்டிகள் முதல் முறையாக பாலம் அமைப்பின் மூலம் தருமபுரி ஜெயம் பொறியியல் கல்லூரியில் நடைபெறுகிறது. இது போல எல்லா மாவட்டங்களிலும் நடத்தப்பட்டால்தான் கேரம் போட்டியின் முக்கியத்துவத்தை இளைஞர்கள் புரிந்துகொள்வார்கள்.
உலக அளவிலான கேரம் போட்டியில் வெற்றிபெறுபவர்களுக்கு மாநில அரசு முதல் பரிசாக ரூ.20 லட்சம் வழங்குகிறது என்றார் அவர்.