கேரள மாநிலம் கொல்லம் பூந்தலத்தாழம் பகுதியைச் சேர்ந்தவர் சோமன். இவரது மனைவி சுனிதி. இத்தம்பதியினரின் மகள் ஷைனி (27). இவருக்கு திருமணமாகி, மூன்று குழந்தைகளுடன் மய்யநாடு கிராமத்தில் கணவர் சுனில் என்பவருடன் வசித்து வந்தார். அவரது கணவர் கூலிவேலை செய்து வருகிறார்.
இந்நிலையில் கடந்தாண்டு ஆகஸ்ட் மாதம் அவர் திடீரென மாயமாகி விட்டார். அவரை பல இடங்களில் தேடியும் கிடைக்காததால், இரவிபுரம் போலீசில் அவரது பெற்றோர் புகார் செய்தனர். போலீசார் அவரை பல இடங்களிலும் தேடி வந்தனர். இந்நிலையில் 18ம் தேதி பரவூர் போலீஸ் நிலைய பகுதியில் உப்பங்கழியில் கிடந்த பிணம் மாயமாகி விட்ட ஷைனியின் உருவத்தை ஒத்திருந்தது. இது குறித்து, அவரது பெற்றோருக்கு தகவல் கொடுக்கப்பட்டது. அவர்களும் விரைந்து சென்று, மருத்துவமனையில் வைக்கப்பட்டிருந்த உடலை பார்த்து தனது மகள் தான் என உறுதி செய்தனர். அதன் பின்னர் பிணம் அடக்கம் செய்யப்பட்டது.
இதை அடுத்து தனது மகள் கொலை செய்யப்பட்டிருக்கலாம் என, ஷைனியின் பெற்றோர் போலீசில் தெரிவித்தனர். இது குறித்து போலீசார் விசாரணை துவக்கினர். அப்போது ஷைனி வசித்து வந்த பகுதியிலேயே கலேஷ் என்பவரும் அதே தினத்தில் மாயமானது தெரிந்தது. கலேஷின் பெற்றோரிடம் போலீசார் விசாரித்தனர். விசாரணையில், அவரது மொபைல்போன் எண்ணை தெரிந்து கொண்ட போலீசார் அதில் தொடர்பு கொண்டபோது, அது சுவிட்ச் ஆப் செய்யப்பட்டிருந்தது. மொபைல்போன் மூலம், கலேஷிடம் இருப்பிடத்தை தெரிந்து கொள்ள போலீசார் எடுத்த முயற்சிகள், தோல்வியை சந்தித்ததை அடுத்து இந்த வழக்கை, போலீசார் மாநில கிரைம் போலீஸ் பிரிவுக்கு மாற்றினர்.
கிரைம் போலீசார் விசாரணையில், பத்தனம்திட்டா மாவட்டம் வடசேரிக்கரா அருகே மண்ணாரக்குளஞ்சி கிராமத்திற்கு சென்றனர். அங்கு தலைமறைவு வாழ்க்கை நடத்தி வந்த கலேஷை, பிடிக்கச் சென்றபோது போலீசாருக்கு அதிர்ச்சி காத்திருந்தது. மாயமாகி இறந்து விட்டதாக கருதி, அடக்கம் செய்யப்பட்ட ஷைனியும் அவருடன் இருந்தார். அவர்கள் இருவரையும் போலீசார் கைது செய்து அழைத்துவந்து விசாரித்து வருகின்றனர்.
இந்நிலையில் இறந்து போனது ஷைனி என்று கூறி, அடக்கம் செய்யப்பட்ட பெண் யார் என்பது, தற்போது பரவூர் போலீசாருக்கு புதிய தலைவலியை உண்டுபண்ணி உள்ளது.